தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தர ஊதியம் உள்ளிட்ட பயன்களை 10 முதல் 20 ஆண்டுகள் நிறைவு செய்த அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவற்றை வழங்கி கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது.அவர்களுக்கு வழங்கும் தேர்வு நிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவற்றை பெறுவதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது.
நாங்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.எனவே, எங்களுக்கும் அந்த சிறப்புச் சலுகைகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஜி.ஈஸ்வரன், எம்.நாகேஸ்வரி உள்பட 27 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு சலுகை ஊதியங்களை வழங்கக் கோரியும் 27 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் வி.தனபாலன், புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:1993-ஆம் ஆண்டு அரசாணையின்படி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்வுநிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகிய பயன்களைப் பெற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் உரிமை உள்ளது.இதை உயர் நீதிமன்ற அமர்வும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.
ஆனால், இது தொடர்பாக முன்தேதியிட்டு நிலுவைத் தொகையை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது. அது அரசின் நிதிநிலையைப் பொறுத்தது. அதுகுறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்.அரசு இதுபோன்று கொள்கை முடிவெடுக்கும்போது, தகுதியான நபர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு, தானாகவே அவ்வாறு செய்யவில்லையெனில் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறுகின்றனர்.எனவே, 1993-ஆம் ஆண்டு அராசணையின் பயன்களை 10 முதல் 20 ஆண்டுகள் நிறைவு செய்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுநிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment