Monday, 19 January 2015

பள்ளிக் குழந்தைகளுக்கு தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி விபரங்களை சேகரிக்க உத்தரவு



பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என, மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக வடிவமைக்கப்பட்ட, மாநில கல்வி மேலாண் தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.,) என்ற வலைதளத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் விவரம் சேகரிக்கும் திட்டம், கடந்த 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது.

குறிப்பாக, 14 வயதுக்குட்பட்ட மாணவர் படிக்கும் பள்ளி பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டது. அதனால், மாணவரின் இடைநிற்றல், இடம் பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால், மாணவரின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க தொடர் கண்காணிப்பு செய்ய முடியும்.

இ.எம்.ஐ.எஸ்., பதிவில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவரின், பெயர், பெற்றோர் பெயர், வகுப்பு, முகவரி, ரத்த வகை, உடன் பிறந்தோர், அவர்களின் கல்வி விபரம், தொழில், பெற்றோர் மாத வருமானம், மொபைல் போன் எண், மாற்றுத்திறன் தகுதி, ஆதார் அடையாள எண் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

கடந்த 2013-14ம் கல்வியாண்டில், ஆன்லைன் மூலம் பதியப்பட்ட விவரங்களில், பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், பள்ளி செல்லா மாணவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், மீண்டும் இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின்படி, மாணவரின் எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இருந்தும், பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆன்லைன் மூலம் விவரங்கள் அப்டேட் செய்ய, போதுமான தகவல் தொடர்பு வசதி இல்லாததால், இ.எம்.ஐ.எஸ்., விவரங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, அந்தந்த தலைமையாசிரியர்கள் அருகில் உள்ள வட்டார வள மையம், பள்ளிக்கு சென்று அப்டேட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாநில திட்ட இயக்குனரகம் கூறிய உத்தரவுபடி, புதியதாக துவங்கப்பட்ட பள்ளிகள், மூடப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் என, மூன்று பிரிவுகளாக பள்ளிகளை பிரித்து, தனித்தனியாக கணக்கிட வேண்டும். ஏற்கனவே உள்ள பள்ளிகளை வழக்கம்போல், அப்டேட் செய்ய வேண்டும்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவரின் விவரம், முதல்கட்டமாக, வரும் 31ம் தேதிக்குள், அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான துவக்கப்பள்ளியில் ஆன்லைன் வசதியில்லாததால், அருகில் உள்ள பள்ளி மற்றும் வட்டார வள மையங்களை நாட வேண்டியுள்ளது. பள்ளிகளை மூன்று பிரிவாக பிரித்து கணக்கெடுப்பு நடத்துவதால், மாணவரை எளிதாக அடையாளம் காண முடியும்.

மேலும், ஒன்று முதல், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் வரை, ஆதார் எண் பதிய வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதி ஆய்வு அலுவலர்கள் மூலமாக, மாவட்ட கலெக்டருக்கு கடிதம் வைத்து, மாணவருக்கு என்று சிறப்பு ஆதார் முகாமை, மண்டலம் வாரியாக நடத்தி, ஆதார் எண்ணை, அப்டேட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment