தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத்தவணை கட்டி வரும் அனைவருக்கும் இந்தக் கட்டுரை ஒரு விழிப்புணர்வைத் தரும்.
வங்கிகளின் வீட்டுக் கடன் பெற்றவர்கள் கீழ் வரும் வினாக்களுக்கு விடை தெரிந்தால் மட்டுமே நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை எனில் சுற்றுப் பாதையில் செல்லக் கூடும். இதனால் வீணான பண விரயம் ஏற்படும். மேலும் வீட்டுக் கடனைக் கட்டக் காலதாமதம் ஏற்படும்.
1. கடன் நிலுவை தொகை எவ்வளவு?
2. செலுத்தும் மாதத் தவணையில் அசல் எவ்வளவு? வட்டி எவ்வளவு?
3. கடனுக்கான வட்டி விகிதம் இப்போது எவ்வளவு?
இவற்றுக்கான பதிலைத் தெரிந்து கொண்டால் பணவிரயத்தையும் கால தாமதத்தையும் தடுக்க முடியும். திருவண்ணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் சொந்த அனுபவம் இது:
ரமேஷும் அவரது மனைவியும் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள். வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வீணாக வாடகை கொடுப்பதற்குப் பதிலாக ஒரு வீட்டை வாங்கித் தவணை செலுத்தினால் சில ஆண்டுகளில் வீடு நமக்குச் சொந்தமாகும் என நினைத்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தனர். தங்களது இல்லக் கனவை நனவாக்கினர். இதன் மூலமாக அவர்களுக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கின்றது.
இது வரை எல்லாம் சரிதான். ஆனால் அதற்குப் பிறகு நடந்ததுதான் நமக்குப் படிப்பினை. முதலில் ரமேஷ் வாங்கிய கடன் தொகை 25 லட்சம். வாங்கும்போது வட்டி விகிதம் 10.50 சதவீதம். கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கால அளவு 240 மாதம் (20 ஆண்டுகள்). செலுத்த வேண்டிய மாதத் தவணை தொகை 25 ஆயிரம் ரூபாய்.
இரண்டு வருஷம் கடந்த நிலையில் அதாவது 24 மாதங்கள் கடந்த பிறகு தனது கடன் தொகை எவ்வளவு குறைந்துள்ளது என்பதைப் பார்க்க நினைத்தார். இணையம் வழியாக அதைப் பார்க்க முடியும். ரமேஷ் கணக்கைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சியில் உறைந்தார். இரு வருடங்கள் கடன் தவணை செலுத்திய பிறகு கடனுக்கான அசல் தொகை சிறிதுதான் குறைந்துள்ளது. மேலும் செலுத்த வேண்டிய கால அளவு அதிகரித்து உள்ளது. வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தார்.
அதாவது அவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் பெற்றபோது 10.50 சதவீதம் வட்டி விகிதம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாறும். அதன்படி ஒரு கடந்த நிலையில் வட்டி விகிதம் 11 சதவீதம் என்று மாறியது. அதனால் உங்கள் மாதத் தவணையை உயர்த்தாமல் கடன் கால அளவை நீட்டித்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். ரமேஷ் இன்னும் 20 வருடங்கள் செலுத்த வேண்டுமா என அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சூழ்நிலையில் எதேச்சையாக ஒரு நாள் செய்திப் பத்திரிகையில் அவர் கடன் பெற்ற தனியார் வங்கியின் வீட்டுக் கடனுக்கான விளம்பரத்தைப் பார்த்தார். அதில் புதிய வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 10.15 சதவீதம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் வங்கியை அணுகினார். விளம்பரத்தில் 10.15 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே எனக் கேட்டுள்ளார்.
இப்போது வட்டி விகிதம் குறைந்துள்ளது. அதன் படி 10.15 சதவீதம்தான் வட்டி விகிதம் எனப் பதிலளித்துள்ளனர். உங்கள் வட்டி சதவீதத்தை மாற்ற ‘Conventional Fees' செலுத்தி ‘Conventional Form'யைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் வட்டி விகிதம் குறையும் எனச் சொல்லியுள்ளனர்.
இந்தப் புதிய வட்டி விகிதக் குறைப்பின்படி ரமேஷூக்கு 16 மாத காலத் தவணைத் தொகை குறைகிறது. அதனால் அவரும் உடனடியாக வங்கி சொன்ன வழிமுறையில் தன் வட்டி விகிதக் கணக்கை மாற்றினார்.
இந்தச் சம்பவத்தில் இருந்து வட்டி விகிதம் கூடினால் வங்கிகள் தாமாகவே அதைச் சரிசெய்துகொள்ளும். ஆனால் குறைந்தால் நாம்தான் வங்கியை அணுகி, விதிமுறைகளின்படி சரிசெய்ய வேண்டும்.
No comments:
Post a Comment