Thursday 26 February 2015

தேர்வு காலத்தில் எது முக்கியம்.............?

தற்போது தேர்வு காலம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் படிப்பு சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சமயத்தில் படிப்பை சிதைக்கும் அமைதி ஆயுதமாக வந்துவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. நம்மை மனத்தளவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் உலகப் போட்டி என்பதால், தேர்வுக்காக படிப்பவர்களின் மனது கண்டிப்பாக அலைபாயும். ஆனாலும் `கிரிக்கெட்-ஐ’ நாம் நெருங்காமல் இருப்பதற்கு சில ஐடியாக்கள்…

தேர்வு ஒரு மைல்கல்: நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேர்வு எழுதும் வாய்ப்பு திரும்பவும் கிடைக்காது என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்குப் பின்னர், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கலாம்.

தினமும் படிப்பு: தொடர்ந்து படியுங்கள்… கடைசி கட்ட படிப்பு என்பது உங்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் என்பதால் தினமும் படித்துக் கொண்டே இருங்கள். தினமும், தொடர்ந்து படிப்பவர்களுக்கு சோம்பல் ஏற்படாது.

ஸ்கோர் ஆர்வம்: படிக்கும்போது எக்காரணம் கொண்டும், கிரிக்கெட் ஸ்கோர் குறித்து யாரிடமும் கேட்க வேண்டாம். அப்படி கிரிக்கெட் குறித்து உங்களுடைய ஆர்வம் அதிகமாகும்போது, கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பது மிகவும் கஷ்டமாகிவிடும்.

இடைவேளை ஆர்வம்: பல மணி நேரம் தொடர்ந்து படிக்காமல் கொஞ்சம் இடைவெளி விடுவது மனதுக்கு ரிலாக்ஸாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் தியானம், யோகா என்று பயிற்சி எடுத்தால் நல்லது. அதை விட்டுவிட்டு கிரிக்கெட் போட்டியை பார்த்தால், படிப்புக்கும், போட்டிக்கும் இடையே உங்களுடைய மனது ஊசலாடும்.

டிவிக்கு தடை!?: ?இது தேர்வு காலம் என்பதால் டெலிவிஷன் பெட்டியை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். பாடங்களை தேர்வுக்காக படிக்காமல், புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் படியுங்கள்.

கட்டுப்பாடு அவசியம்: தேர்வு காலத்தில் வெளியே செல்லும்போது, கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது, அதைப் பற்றி பேசுவது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். இது உங்களின் நினைவுத் திறனை பாதிக்கும். இதன் தாக்கம் தேர்வில் வெளிப்படும். மேலும் அது தொடர்பாக பேசும் நண்பர்களையும் தவிர்த்து விடுங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்: தேர்வு காலத்தில் உங்களுடைய எண்ணங்களும், செயல்பாடுகளும் கட்டுப்பாடாக இருப்பது அவசியம். அதற்காக மனதை கசக்கி பிழிய வேண்டும் என்பதல்ல. படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் ரிலாக்ஸாக இருங் கள்.

வெற்றிக்கான சூத்திரம்: தேர்வுக்கு தயாராகும் போது அதைப் பற்றிய எண்ணங்களும், கனவுகளுமே அதற்கான முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆதலால், வெற்றி ஒன்றே உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.சாம்பியன் நீங்கள் ஹீரோவாக நினைக்கும் அனைத்து சாம்பியன்களுமே, தங்களுடைய விளையாட்டில், போட்டியில்… கவனமாக இருப்பார்களே ஒழிய, மற்ற விஷயங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏன்… நீங்களும் அப்படி இருக்கக் கூடாது?!

அனுபவியுங்கள்: தேர்வுக்காக நீங்கள் படிப்பதை ஒருபோதும் கஷ்டமாக எண்ணாதீர்கள். அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து தேர்வு எழுதுங்கள். இந்த தேர்வு உங்களுடைய எதிர்கால முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் ஒரு முத்திரை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.டெலிவிஷனுக்கும், 
கிரிக்கெட்டுக்கும் `தடா’ சொன்னால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் முன்னேறலாம்.

No comments:

Post a Comment