Wednesday 20 July 2016

தூய்மை பள்ளி விருது திட்டம்: 'மொபைல் ஆப்' அறிமுகம்

மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க, 'மொபைல் ஆப்'
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது.


நிதி ஒதுக்கீடு : இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கழிப்பறைகளை, தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாத சம்பளம் மற்றும் கிருமி நாசினி வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து, கை கழுவ சோப்பு, கைத்துண்டு தர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை ஊக்குவிக்க, சிறந்த துாய்மை பள்ளிகளுக்கு, மத்திய அரசு, 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருது வழங்குகிறது. இதை பெற, அரசு பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நாடு முழுவதும், 500 பள்ளிகளை தேர்வு செய்து தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில், 39 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதில், பள்ளிகளின் அடிப்படை வசதிகள், சுகாதாரம் குறித்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

50 ஆயிரம் ரூபாய் : இதுதவிர, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, 'ஸ்வச் வித்யாலயா மொபைல் ஆப்' மூலமும் பள்ளிகள் தனியாக விண்ணப்பிக்கலாம்.
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்வர். மாவட்ட குழுவில் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், சிறந்த மூன்று தலைமை ஆசிரியர்கள், இன்ஜினியர், உடல்நல அலுவலர், இரு தன்னார்வலர்கள் இடம்பெறுவர்.
மாநில குழுவில் பள்ளிக்கல்வி செயலர், இயக்குனர், உடல்நல இயக்குனர், இரு தலைமை ஆசிரியர்கள், தலைமை இன்ஜினியர், பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் இடம்பெறுவர். தேசிய குழுவில், தலைமை கல்வி செயலர், துணை செயலர் இடம்பெறுவர். மாநிலத்தில், 40 பள்ளிகள் தேர்வு செய்து, அதில், 20 பள்ளிகள், தேசிய போட்டிக்கு பரிந்துரை செய்யப்படும். 20 பள்ளிகளுக்கு விருது, அங்கீகார சான்று வழங்கப்படும். சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்படும், 500 பள்ளிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதி, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்த வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விபரம், நவ., 25ல் அறிவிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment