உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களின் நலனுக்கு, இந்திய தொழிலதிபர் ஒருவர், தன் சொத்தில் சரிபாதியை வழங்க முன்வந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வாரன் பபெட், மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர், 'கிவிங் பிலெட்ஸ்' என்ற அமைப்பை நிறுவி, உலகம் முழுவதும் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நல்ல நோக்கத்திற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க், இந்தியாவின் விப்ரோ குழுத்தைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி உள்ளிட்டோரும், தங்களது சொத்தின் பெரும் பகுதியை தானமாக அளித்துள்ளனர்.இந்த வரிசையில், கேரளாவில் பிறந்து, துபாயை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மையங்களை நடத்தி வரும், சன்னி வர்க்கியும் இணைந்துள்ளார்.இவர், தன் சொத்தில் சரிபாதியை, ஆசிரியர் நல பணிகளுக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.சன்னி வர்க்கிக்கு சொந்தமான, ஜெம் பவுண்டேஷன் பள்ளிகளில், 153 நாடுகளைச் சேர்ந்த, 1.40 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.மேலும், இவரது அறக்கட்டளை ஆப்ரிக்காவில் மேற்கொண்ட கல்வி திட்டத்தின் மூலம், 12 ஆயிரம் ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் மூலம், 1 கோடி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆசிரியர் சமூகத்திற்கு ஊக்கமளிக்க, ஆண்டுதோறும் உலகளவில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர் ஒருவருக்கு, இவரது அறக்கட்டளை, 10 லட்சம் அமெரிக்க டாலர்களை பரிசு வழங்கி கவுரவிக்கிறது.இதுகுறித்து சன்னி வர்க்கி கூறுகையில், 'உலகை அச்சுறுத்தி வரும், வன்முறை, வறுமை மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்னைகளுக்கு கல்வி ஒன்றே தீர்வு. எனவே, இதற்கு ஆதரமாக விளங்கும் ஆசிரியர்களின் நலனுக்கு சொத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி' என்றார்.
No comments:
Post a Comment